செய்திகள்
சேனிடைஸர்

சேனிடைஸர் பயன்படுத்தினால் கைகள் இப்படி ஆகிடுமா?

Published On 2020-03-25 04:20 GMT   |   Update On 2020-03-25 04:20 GMT
கைகளை சுத்தப்படுத்தும் சேனிடைஸர் பயன்படுத்தினால் கைகளில் தீப்பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.



கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மக்களை சேனிடைஸர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் மற்றும் உடல்நல நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், சேனிடைஸர் பயன்படுத்தினால் கைகளில் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. 

ஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவுகளில் தீப்பிடித்து எரிந்த கைகளின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன், "இந்த பெண் தனது கைகளில் சேனிடைஸர் பயன்படுத்திவிட்டு சமையலறைக்கு சமைக்க சென்றா். அடுப்பை பற்ற வைத்த அடுத்த நொடியே சேனிடைஸர் பூசப்பட்டிருந்த அவரது கைகளில் தீப்பிடிக்க துவங்கிவிட்டது. "

சேனிடைஸரில் மதுபான இரசாயணம் கலக்கப்பட்டு இருப்பதே தீப்பிடிக்க காரணம் என கூறப்படுகிறது. இதே தகவல் வாட்ஸ்அப் தளத்திலும் வைரலாகி வருகிறது. எனினும், வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

உண்மையில் சேனிடைஸர்களில் உள்ள மதுபான இரசாயணம், கைகளில் பூசப்பட்டதும் காற்றோடு கரைந்து விடும். இதனால் தீப்பிடிக்கும் அபாயம் கிடையாது.



வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது குறிப்பிட்ட பெண் சரும சிகிச்சை மேற்கொண்ட போது ஏற்பட்ட காயம் என தெரியவந்துள்ளது. உண்மையில் புகைப்படத்தில் இருப்பவரின் கைகளில் இருக்கும் தோல் உடலின் மற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டதாகும். 

அந்த வகையில் வைரல் புகைப்படம் சேனிடைஸர் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின் எடுக்கப்பட்டது என கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.
Tags:    

Similar News