செய்திகள்
கொரோனா வைரஸ் கோப்புப்படம்

இந்தியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறதா?

Published On 2020-03-24 04:32 GMT   |   Update On 2020-03-24 04:32 GMT
இந்தியாவில் மத்திய அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.



மத்திய அரசு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்ய இருப்பதால், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள கோரும் குறுந்தகவல் வாட்ஸ்அப்பில் வேகமாக வலம் வருகிறது. மெடன்டா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவரான மருத்துவர் நரேஷ் டிரெஹன் தெரிவித்ததாக வைரல் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. 



வைரல் குறுந்தகவல்களில்: "தற்போது தான் மருத்துவர் டிரெஹனிடம் இருந்து தகவல் கிடைத்தது. ஓரிரு நாட்களில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட இருக்கிறது. தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான ரொக்கம் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ளுங்கள்." என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

ஆய்வில் வைரல் குறுந்தகவல் போலி என தெரியவந்துள்ளது. மருத்துவர் டிரெஹன் அலுவலகம் சார்பில் அதுபோன்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 


மேலும் மெடன்டா மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வைரல் குறுந்தகவல் போலி என்றும், மருத்துவர் டிரெஹன் அதுபோன்ற தகவலை வெளியிடவில்லை" என பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட இருப்பதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என்பது தெளிவாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.
Tags:    

Similar News