செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றுங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Published On 2020-03-24 02:12 GMT   |   Update On 2020-03-24 02:12 GMT
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, வைரஸ் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, வைரஸ் தடுப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தீவிரமாக பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது. மராட்டியம், டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழகம் என பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் நாளுக்கு நாள் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல மாநிலங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று காலை முதல் டெல்லி மூடப்பட்டு உள்ளது.

இதைப்போல பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இதைத்தவிர தமிழகம், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான அரசுகளின் போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்து இருக்க, மறுபுறம் இந்த விதிமுறைகளை மக்கள் மீறி வருவதும் தெரியவந்துள்ளது. இது மத்திய-மாநில அரசுகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு, எல்லைகள் மூடல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவுசெய்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அரசுகளின் அறிவுறுத்தல்களை தீவிரமாக பின்பற்றுங்கள். கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
Tags:    

Similar News