செய்திகள்
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

Published On 2020-03-23 01:55 GMT   |   Update On 2020-03-23 01:55 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மகாராஷ்டிராவின் நகர்ப்புறங்களில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மும்பை :

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக மராட்டிய மாநிலத்தை அச்சுறுத்தி வருகிறது. நிதி தலைநகரான மும்பையிலும், புனேயிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 63 வயது முதியவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் நேற்று மகாராஷ்டிரா மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்தது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வருகிற நாட்களை மிகவும் கவனமாக கையாள வேண்டி உள்ளது.



இதனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மும்பை, தானே, புனே, பிம்பிரி-சிஞ்ச்வாட், நாக்பூர் உள்பட மாநிலத்தின் நகர்பகுதிகளில் 144 தடை உத்தரவு இன்று(திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை அமல்படுத்தப் படுகிறது. எனவே இன்று முதல் 5 பேருக்கு மேல் கூட்டமாக பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்று முதல் சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து யாரும் மராட்டியம் வரமுடியாது. இதனால் கொரோனா பரவலை தடுக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தயவு செய்து தனியறையில் இருக்க கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வேண்டாம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று முதல் 31-ந் தேதி வரை மாநிலத்தில் பஸ், எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், பால், காய்கறி, மின்சாரம், வங்கி சேவை, குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். இதேபோல அரசு நிறுவனங்கள் 5 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 50 மற்றும் 25 சதவீத ஊழியர்களுடன் அரசு நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மக்களின் நலன் கருதி மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

முன்னதாக மும்பையில் நேற்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்த சுய ஊரடங்கிற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து இருந்தனர். இதனால் மும்பை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News