செய்திகள்
சோனியா காந்தி

கொரோனா தாக்கம்: அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க சோனியா வலியுறுத்தல்

Published On 2020-03-21 14:55 GMT   |   Update On 2020-03-21 14:55 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மரணங்கள் 11 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி, சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, இன்று முன்னூறாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட  அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வலியுறுத்தியுள்ளார்.



இதுதொடர்பாக, இன்று மாலை சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், இந்த வசதிகள் கிடைக்கும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக தனி இணையம் உருவாக்கப்பட வேண்டும்’ என பிரதமரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் பொருளாதாரரீதியாக நலிவடைந்த அனைத்துதரப்பு மக்களுக்கும் துறைரீதியாக நிவாரணத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். இந்த கொடிய வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க அதிகமான சிகிச்சை மையங்களை தொடங்குவதற்காக மத்திய அரசு சிறப்பு நிதித்தொகுப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

அசாதாரணமான வேளைகளில் அசாதாரணமான நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டியுள்ளது.  எனவே, அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் தேவையான வரிகுறைப்பு, வட்டி தள்ளுபடி, மாதச் சம்பளக்காரர்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான காலநீட்டிப்பு உள்பட துறைரீதியாக சில சலுகைகளை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக அறிவித்தாக வேண்டும்.

குறிப்பாக, சிறுதொழில்கள் மற்றும் குறுந்தொழில்கள் மிகவும் நலிவடைந்துள்ளன. பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளதால் தினக்கூலிகள் மற்றும் மாதாந்திர சம்பளம் பெறும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான ரொக்க நிவாரணம் மற்றும் விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் சோனியா காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் நெருக்கடியான இந்த வேளையில் மக்களை பீதியடையாமல் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News