செய்திகள்
திருப்பதியில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் அலிபிரியில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

தரிசன ரத்து உத்தரவு தெரியாமல் திருப்பதிக்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம்

Published On 2020-03-20 06:48 GMT   |   Update On 2020-03-20 06:48 GMT
கொரோனா பீதியால் திருப்பதிக்கு பக்தர்கள் வர தடை செய்யப்பட்டுள்ள தகவல் தெரியாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களை அலிபிரியில் தேவஸ்தான அதிகாரிகள், போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.
திருமலை:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தீர்த்த யாத்திரை குழுவினர் 110 பேர் திருமலைக்கு வந்தனர். அதில் ஒருவருக்கு காய்ச்சல் அதிகரித்ததை தொடர்ந்து திருப்பதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாவதற்கு சில நாட்கள் தேவைப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவருடன் வந்த 110 பேரும், சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த தொற்று அனைவருக்கும் பரவாமல் தடுக்க ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வர ஒரு வாரத்துக்கு தடை விதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கான உத்தரவு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருப்பதி மலைக்கு செல்லும் பாதை, பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதைகள் மூடப்பட்டது. நேற்று நேர ஒதுக்கீடு முறையில் தரிசனத்துக்கு அனுமதி பெற்ற 47,957 பக்தர்கள் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்களை மட்டும் தரிசனத்துக்கு அனுமதித்த பின் இன்று மதியம் 12 மணி முதல் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்றின் வேகம் குறையத் தொடங்கிய பின் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது-

அரசு உத்தரவை தொடர்ந்து ஏழுமலையான் கோவில் உட்பட தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவில், கோவிந்த ராஜா சுவாமி, கோதண்டராமர் கோவில் அனைத்து கோவில்களிலும் ஒரு வார காலத்துக்கு பக்தர்களுக்கான தரிசன அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசிடம் இருந்து மறு உத்தரவு வந்தபின், அப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

1892-ம் ஆண்டு இது போன்ற ஒரு காரணத்தால் ஏழுமலையான் கோவில் முழுமையாக அடைக்கப்பட்டது. ஆனால் இப்போது கோவில் நடை அடைக்கப்படவில்லை. அதற்கு பிறகு 128 ஆண்டுக்கு பிறகு தற்போது பக்தர்கள் தரிசனத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் தினமும் அதிகாலையில் கோவிலை திறந்து ஏழுமலையானுக்கு நடத்தப்படும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை அர்ச்சகர்கள் நடத்துவார்கள்.

பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய அனுமதி கிடையாது.

இன்று மதியம் வரை திருமலைக்கு வந்து சேர்ந்த அனைத்து பக்தர்களுக்கும் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பக்தர்கள் தரிசனம் செய்தபின் திருப்பதி மலையில் உள்ள மொட்டை போடும் மண்டபங்கள், அன்னதான கூடம் மூடப்படும்.

ஏழுமலையானை வழிபடுவதற்காக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு எந்த வகையிலான மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்வோம் என்றார்.

கொரோனா பீதியால் திருப்பதிக்கு பக்தர்கள் வர தடை செய்யப்பட்டுள்ள தகவல் தெரியாமல் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர்.

அவர்கள் வரும் வாகனங்கனை அலிபிரி பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள், போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் தரிசனத்திற்கு செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Tags:    

Similar News