செய்திகள்
மேடையில் நிலை தடுமாறிய டிரம்ப்

மேடையில் நிலை தடுமாறிய டிரம்ப்... வைரலாகும் வீடியோ கூறும் தகவல் உண்மையா?

Published On 2020-03-20 05:25 GMT   |   Update On 2020-03-20 05:25 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேடையில் உரையாடி கொண்டிருக்கும் போது நிலை தடுமாறிய வீடியோவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் உண்மையா என தொடர்ந்து பார்ப்போம்.



உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தீவிரம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், அமெரிக்க அதிபருக்கு கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

15 நொடிகள் ஓடும் வீடியோவில், மேடையில் பேசிக் கொண்டிருக்கும் டிரம்ப் திடீரென நிலை தடுமாறும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. 

வைரல் பதிவுகளில், ‘ஒரு நிமிடத்திற்கு முன் வந்தது: டிரம்ப் தற்போது மயக்கமுற்றார்! முக்கிய செய்தி! அமெரிக்க அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி பதவியேற்கிறார். நாடு முழுக்க பதற்றமான சூழல் நிலவுகிறது. சீன விசா வைத்திருக்கும் பல அமெரிக்கர்கள் சீன விமானத்தில் பயணம் செய்ய பத்து மடங்கு கூடுதல் தொகை கொடுக்க முற்படுகின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.’ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



இதே வீடியோ யூடியூப் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், ஆய்வில் இந்த வீடியோ மூன்று ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. கடந்த வாரம் டிரம்ப்பிற்கு கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு, முடிவில் அவருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் டிரம்ப்பிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News