செய்திகள்
மகாராஷ்டிரா சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே

அடுத்த மாதத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பு: மகாராஷ்டிரா மந்திரி அதிர்ச்சி தகவல்

Published On 2020-03-20 02:33 GMT   |   Update On 2020-03-20 02:33 GMT
கொரோனா வைரஸ் அடுத்த மாதம் அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.
மும்பை :

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் மராட்டியத்தில் தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோயை பொருத்தவரை ஆரம்பத்தில் குறைவான அளவிலேயே பாதிப்பு காணப்படுகிறது. ஆனால் சில வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த மாதம்(ஏப்ரல்) நிலைமையை நினைக்கும்போது கவலை அளிக்கிறது. அப்போது கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.



பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாகவும் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

தற்போது வெளிநாட்டினர் மூலம் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் உள்நாட்டை சேர்ந்தவர்களிடம் இருந்தே மற்றவர்களுக்கு பரவும் நிலைக்கு மராட்டியம் செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா எல்லைகள் மூடப்படுமா? என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மந்திரி ராஜேஷ் தோபே, “நாங்கள் விரும்புவதும் அதை தான். ஆனால், மக்கள் தாமாக முன்வந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளவேண்டும். அரசின் ஆலோசனைகளை மக்கள் இனியும் மீறினால், நகரங்களை குறிப்பாக மும்பை உள்ளிட்ட முக்கிய நகர எல்லைகளை மூட வேண்டியிருக்கும்” என்றார்.
Tags:    

Similar News