செய்திகள்
முகக்கவசம்

பீகாரில் முகக்கவசம் தயாரிக்கும் சிறை கைதிகள்

Published On 2020-03-19 02:52 GMT   |   Update On 2020-03-19 02:52 GMT
பீகாரின் முசாபர்பூர் மத்திய சிறை நிர்வாகம் கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளது. இந்த பணியில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
முசாபர்பூர்:

கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு தடுப்பு முறைகளை கையாளுமாறு அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளன. இதில் முக்கியமாக முகக்கவசம் அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதேநேரம் இந்த முகக்கவசத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இவை கிடைக்கும் பகுதிகளிலும் அதிக விலைக்கு விற்பதாலும், வியாபாரிகள் பதுக்குவதாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



இதனால் பீகாரின் முசாபர்பூர் மத்திய சிறை நிர்வாகம் கைதிகள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளது. இந்த பணியில் சுமார் 50 கைதிகள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் முகக்கவசங்கள் அந்த சிறையில் உள்ள சக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் இந்த சிறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 9 கிளை சிறைகளுக்கும் இந்த முகக்கவசங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக சிறை துணை சூப்பிரண்டு சுனில் குமார் மவுரியா தெரிவித்தார். சிறை கைதிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பீகாரில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News