செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

நிர்பயா வழக்கு குற்றவாளி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்

Published On 2020-03-18 15:16 GMT   |   Update On 2020-03-18 15:16 GMT
நிர்பயா வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை டெல்லி ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி:

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்தார். அதில், குற்றம் நடைபெற்ற 2012 டிசம்பர் 16-ம் தேதி தான் டெல்லியிலேயே இல்லை. குற்றம் நடந்த மறுநாள் (டிசம்பர் 17) தன்னை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என கோரியிருந்தார். 

அந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றவாளி தாக்கல் செய்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், டெல்லி கூடுதல் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் இன்று டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் , விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த குறைபாடும், சட்டவிரோதமும், முறைகேடும் இல்லை என தெரிவித்த ஐகோர்ட், முகேஷ் சிங் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News