செய்திகள்
மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை- மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

Published On 2020-03-18 09:52 GMT   |   Update On 2020-03-18 09:52 GMT
நிதி நெருக்கடியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
புதுடெல்லி:

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள போட்டி, கட்டண சரிவு உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

விருப்ப ஓய்வு திட்டம் (விஆர்எஸ்) மூலம் ஏராளமான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடலாம் அல்லது தனியார்வசம் ஒப்படைக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, பிஎஸ்என்எல் நிறுவன விவகாரம் தொடர்பாக புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினர் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கோ, தனியாருக்கு விற்பனை செய்வதற்கோ மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றார்.



‘கடந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது.  2019ம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை, மொத்தம் உள்ள 1,55,296 ஊழியர்களில், 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுத்தனர்’ என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தாமதம் ஏற்படுவது குறித்த துணை கேள்விக்கு பதில் அளித்த மந்திரி, ‘ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் ஒப்பந்தக்காரர்களின் கீழ் வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. நிரந்தர ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் வரையிலான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

நிரந்தர  ஊழியர்களுக்கு மட்டுமே விஆர்எஸ் வழங்கப்படும் என்று மந்திரி தெளிவுபடுத்தினார். இத்திட்டம் 2019ம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாகவும் கூறினார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக பணியாளர்கள் இல்லாத நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மந்திரி, வி.ஆர்.எஸ் மூலம் ஓய்வு பெற்று சென்றவர்களின் பதவிகள் ஒழிக்கப்படும் என்ற கருத்து தவறானது, அந்த பதவிகள் 3 மாதங்களில் நிரப்பப்பட வேண்டும் என்றார்.

அதன்பின்னர் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசும்போது, பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அதன் சந்தாதாரர்களில் எத்தனை பேர் தனியார் நிறுவனங்களுக்கு மாறினார்கள் என்பதை அறிய விரும்புவதாக கூறினார். இதற்கு பதிலளித்த மந்திரி ரவி சங்கர் பிரசாத், பிஎஸ்என்எல் மரபிற்குள் செல்ல விரும்பவில்லை, என்றார்.
Tags:    

Similar News