செய்திகள்
காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

காங். தலைவர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்க கூடாது: ம.பி. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் டி.ஜி.பி.க்கு கடிதம்

Published On 2020-03-18 08:13 GMT   |   Update On 2020-03-18 08:30 GMT
பெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற திக் விஜய் சிங் கைதான நிலையில் ம.பி. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பெங்களூரு:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர்.  அவர்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். அவர்களை பாஜக பிடித்து வைத்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக இன்று பெங்களூரு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் ரமதா ஓட்டலுக்கு சென்றார். அங்கு எம்.எல்.ஏ.க்களை சந்திக்க முயன்றார். ஆனால், அவரை ஓட்டலுக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அவர் ஓட்டல் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திக்விஜய் சிங்கை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்து அம்ருதஹல்லி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.



கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், மத்திய பிரதேசம் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வெர்மா உள்ளிட்டோரும் கைதாகினர். காவல் நிலையத்தில் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், எங்கள் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. நாங்கள் தன்னிச்சையாகவே இங்கு தங்கி இருக்கிறோம். எங்களை எந்த காங்கிரஸ் தலைவர்களும் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது என ம.பி.யை சேர்ந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News