செய்திகள்
இத்தாலி நாளிதல்

கொரோனா வைரசின் கோரப்பிடி - இத்தாலி நாளிதழில் 10 பக்கத்துக்கு மரண அறிவிப்பு

Published On 2020-03-17 20:08 GMT   |   Update On 2020-03-17 20:08 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளிதழில் வெளியாகும் மரண அறிவிப்பு ½ பக்கத்திலிருந்து 10 பக்கங்களாக உயர்ந்துள்ளது மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ரோம்:

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்த கொடிய வைரஸ் ஐரோப்பிய நாடுகளில், தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது.

குறிப்பாக சீனாவுக்கு வெளியே கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பலி கொண்டு வருகிறது.

அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது வரை 27 ஆயிரத்து, 980 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நகரமான பெர்காமாவிலிருந்து வெளியாகும், ‘லிகோ டி பெர்காமா' என்ற நாளிதழில், வெளியான கொரோனா மரண அறிவிப்பு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த மாதம் 9-ந்தேதி இந்த நாளிதழில் வெளியான மரண அறிவிப்பு ½ பக்கம் அளவுக்கு மட்டுமே இருந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு இருந்தது.

இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து டுவிட்டரில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இணையதள ஆர்வலர்கள் இத்தாலிக்காக வருத்தம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News