செய்திகள்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை - ஜெய்சங்கர் தகவல்

Published On 2020-03-17 18:03 GMT   |   Update On 2020-03-17 18:03 GMT
மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜரோப்பிய நாடுகள், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்கும் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏப்ரல் 14 ம் தேதி வரை கல்வி நிறுவனங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அங்கு மருத்துவம் படித்துவரும் இந்திய மாணவ - மாணவிகள் 200 பேர் வெளியேறி உள்ளனர். இந்தியா வருவதற்காக தமிழக மாணவர்கள் உள்பட அனைவரும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்துள்ளனர்.



ஆனால் மலேசியாவில் இருந்து இந்தியா திரும்ப விமான சேவை இல்லாததால் மாணவர்கள் அனைவரும் அங்கு தவித்து வருகின்றனர். தங்களை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற பயணிகளின் கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டுள்ளோம். உங்களுக்காக டெல்லி மற்றும் விசாகபட்டினத்தில் இருந்து செல்வதற்கு ஏர் ஏசியா விமானங்களுக்கு நாங்கள் இப்போது ஒப்புதல் அளித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் “ இவை கடினமான நேரங்கள், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.  
Tags:    

Similar News