செய்திகள்
ரஞ்சன் கோகாய்

மாநிலங்களவை எம்.பி. ஆக பதவி ஏற்பது ஏன்?: ரஞ்சன் கோகாய் புதிய விளக்கம்

Published On 2020-03-17 14:05 GMT   |   Update On 2020-03-17 14:05 GMT
மாநிலங்களவை எம்.பி. ஆவதன் மூலம் நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அப்பதவியில் இருந்தபோது அயோத்தி நிலம் தொடர்பான சர்ச்சை, ரபேல் போர் விமான பேரம் உள்ளிட்ட சில முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை நேற்று பரிந்துரை செய்தார்.



பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் இந்த பதவிக்கு ரஞ்சன் கோகாய் பெயர் பரிந்துரைக்கப்பட்டதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சில நீதிபதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி. ஆக பதவி ஏற்பதன் மூலம் நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் ரஞ்சன் கோகாய் இன்று குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த ரஞ்சன் கோகாய்,‘பலமான தேசத்தை கட்டமைப்பதற்காக ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நீதித்துறையும் பாராளுமன்றமும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருப்பதால்தான் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

பாராளுமன்றத்தின் உறுப்பினராக நான் இருப்பதால் நீதித்துறையின் கருத்துகளை பாராளுமன்றத்திலும் பாராளுமன்றம் கருதுவதை நீதித்துறை சார்ந்தவர்களிடமும் என்னால் முன்வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News