செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை: கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2020-03-17 02:12 GMT   |   Update On 2020-03-17 02:12 GMT
நாடு முழுவதும் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மத வழிபாடுகள், சமூக, அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி :

உலக நாடுகளை பெரும் இன்னலில் ஆழ்த்தி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை நேற்று 114 ஆக உயர்ந்தது. இவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வைரஸ் அறிகுறிகள் கொண்ட நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் 7 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்து உள்ளது.

இதில் குறிப்பாக டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வருகிற 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 31-ந் தேதி வரை மத வழிபாடுகள், சமூக, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவை டெல்லியில் அனுமதிக்கப்படாது என முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

ஆனால் திருமணங்களுக்கு தடை இல்லை என கூறிய கெஜ்ரிவால், எனினும் திருமண நிகழ்ச்சிகளை தள்ளிவைக்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டு உள்ளார். மாநிலத்தில் தியேட்டர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட்டுள்ள நிலையில், உடற்பயிற்சி கூடங்கள், இரவு விடுதிகள் போன்றவையும் 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்தார்.

இதைப்போல கா‌‌ஷ்மீரிலும் பூங்காக்கள், மலர் தோட்டங்கள் போன்றவை மூடப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது. அங்கு ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவருக்கும் வைரஸ் அறிகுறிகள் உள்ளன. தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வரும் அவருக்கு வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஒடிசாவில் முதல் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்தாலியில் இருந்து வந்த 33 வயது வாலிபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. புவனேசுவரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக இருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.



இதேபோல மராட்டியத்தில் ஏற்கனவே 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் அங்கு 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பீதி காரணமாக மேற்கு வங்காள சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் முடிக்கப்படுகிறது. அங்கு 2-ம் கட்ட கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அந்த பகுதியை ரத்து செய்வதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் ஈரானில் இருந்து 53 இந்தியர்களுடன் 4-வது குழு நேற்று டெல்லி வந்தது. அவர்கள் அனைவரும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ நல்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட 236 பேரில் 3 பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே மராட்டியத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் உயிரிழந்த 68 வயது முதியவர் நுரையீரல் பிரச்சினையால்தான் இறந்ததாகவும், அவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரசை எதிர்கொள்வது குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மற்றும் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மோர்கன் ஒர்ட்டாகஸ் கூறியுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய இரு தலைவர்களும், இந்த சர்வதேச சவாலை எதிர்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவது குறித்தும் ஆலோசித்ததாக மோர்கன் தெரிவித்தார்.
Tags:    

Similar News