செய்திகள்
சபாநாயகர் நர்மதா பிரசாத்

எங்களது ராஜினாமாவையும் ஏற்கவேண்டும் - ம.பி. சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம்

Published On 2020-03-15 13:58 GMT   |   Update On 2020-03-15 13:58 GMT
எங்களது ராஜினாமாவையும் ஏற்க வேண்டும் என மத்தியபிரதேசம் மாநில சட்டசபை சபாநாயகருக்கு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
போபால்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
  
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சமீபத்தில் இணைந்தார்.

ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

22 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால் சட்டசபையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிடும்.

இதற்கிடையே, சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதிக்கு அம்மாநில கவர்னர் லால்ஜி டான்டன் உத்தரவிட்டுள்ளார். இது மத்திய பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக கருதப்படுகிறது. நேற்று நள்ளிரவில் இந்த உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.

நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடியதும் கவர்னர் உரைக்கு பிறகு சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். டிவிசன் முறையில் ஓட்டெடுப்பு நடைபெறும்.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். ராஜினாமா செய்த 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகர் நர்மதா பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 6 அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதுபோல் தங்களது ராஜினாமாவையும் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News