செய்திகள்
உத்தவ் தாக்கரே

கொரோனா பீதி: மும்பை, தானேவில் 30-ம் தேதி வரை திரையரங்கங்கள், ஜிம், நீச்சல் குளங்கள் மூடல்

Published On 2020-03-13 12:49 GMT   |   Update On 2020-03-13 13:49 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாவனர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை:

உலகம் முழுவதும் 127 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுப்பட்டு விட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.
 
இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் இந்த வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியா, ஈரான் நாடுகளிலும் கொரோனா வைரஸ் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டுக்காரர்கள் வரும் விமான நிலையங்கள், துறைமுகங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.



கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரசுக்கு பலியாகி விட்ட நிலையில் 12 மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மிக அதிகமானோர் இருக்கிறார்கள். இதனால் இந்த மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இன்று மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று நள்ளிரவில் இருந்து வரும் 30-ம் தேதிவரை மும்பை, நவிமும்பை, தானே, நாக்பூர், பிம்ப்ரி-சின்ச்சவாட் ஆகிய பெருநகரங்களில் உள்ள திரையரங்கங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மூடிவைக்குமாறு மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News