செய்திகள்
ஆளுநரை சந்தித்த கமல் நாத்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார்- ஆளுநரிடம் கடிதம் கொடுத்த கமல் நாத்

Published On 2020-03-13 09:22 GMT   |   Update On 2020-03-13 09:22 GMT
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக இருப்பதாகவும், அதே சமயம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பாஜக பிடித்து வைத்திருப்பதாகவும் மத்தியப் பிரதேச ஆளுநரிடம் முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.
போபால்:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியில் உள்ளது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கமல் நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், இன்று ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் டாண்டனை சந்தித்து கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தின் நகலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு வெளியிட்டார். 



அதில், பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் கமல் நாத் கூறியிருந்தார். மேலும் பெங்களூரில் சிறைவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுவிப்பதை உறுதி செய்ய, ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்துமாறும் கமல் நாத் கேட்டுக்கொண்டுள்ளார். 

மார்ச் 16ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயாராக இருப்பதாகவும் கமல் நாத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News