செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

கொரோனாவை சரி செய்ய குரானை பயன்படுத்தும் சீனா?

Published On 2020-03-12 07:11 GMT   |   Update On 2020-03-12 07:11 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க பொது மக்களுக்கு அரசாங்கம் சார்பில் குரான் வழங்கப்படுவதாக தகவல் வைரலாகி வருகிறது.



உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று கொரோனா வைரஸ் பற்றிய போலி தகவல்களும் இணையத்தில் அதிகளவு வலம் வருகின்றன.

அந்த வரிசையில் மக்கள் கையில் புத்தகத்துடன் அமர்ந்து இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. வைரல் வீடியோ சீனாவில் குரான் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட்டு, சீன அரசாங்கமே இந்த புனித புத்தகத்தை வழங்க துவங்கி இருக்கிறது எனும் தகவலுடன் பகிரப்பட்டுள்ளது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது, ஏழு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் வீடியோவிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. எனினும், இந்த தகவல் சீனாவில் தற்போதைய நிலை என்ற வாக்கில் ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டு வருகிறது.



கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் சார்பில் சில ஆன்மீக குறுந்தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது என்ற போதும், சீன அரசாங்கம் மக்களுக்கு குரான் வழங்கியதை உறுதிப்படுத்தும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் வைரல் வீடியோ 2013-ம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவின் உண்மை பின்னணி பற்றி எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், இதற்கும் சமீபத்திய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News