செய்திகள்
நஷ்ட ஈடு வசூலிக்க வைக்கப்பட்டுள்ள பேனர்கள்

பேனர் விவகாரம் : ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு மேல் முறையீடு

Published On 2020-03-12 01:28 GMT   |   Update On 2020-03-12 01:28 GMT
நஷ்டஈடு வசூலிப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
லக்னோ:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து ந‌‌ஷ்டஈடு வசூலிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்தது. 

அதற்காக பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என கூறி 53 பேரின் புகைப்படங்கள் மற்றும் பெயருடன் லக்னோ மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நகரின் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. 

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்கான ந‌‌ஷ்டஈடு தொகையை செலுத்த தவறினால், அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பேனர்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பேனர் விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து போராட்டக்காரர்கள் புகைப்படம், வீட்டு முகவரிகளுடன் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குடிமக்களை அவமதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளக்கூடாது எனவும் அரசின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டது தனிநபர் உரிமைகளை பறிக்கும் செயல் என்று கூறி உத்தரபிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 



மேலும், நஷ்டஈடு வசூலிப்பதற்காக போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றும்படி மாநில அரசுக்கு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு 4 நாட்களாகியும் தற்போதுவரை பேனர்கள் அகற்றப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில், பேனர் விவகாரத்தில் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அம்மாநில சட்டமந்திரி பிரிஜேஷ் பதக் கூறுகையில்,'' திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களுக்கு உரிய தண்டணை வழங்க தேவையான அனைத்து சட்டவாய்ப்புகளையும் அரசு பயன்படுத்தும்’’ என்றார். 

Tags:    

Similar News