செய்திகள்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

கொரோனா வைரஸ் பாதித்த இத்தாலி, ஈரானில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவோம் - ஜெய்சங்கர் அறிவிப்பு

Published On 2020-03-11 20:26 GMT   |   Update On 2020-03-11 20:26 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதில் கவனம் செலுத்துவோம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில், தானாக முன்வந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதிப்பு நிறைந்த நாடுகளில்தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இத்தாலி, ஈரானில் தவித்து வரும் இந்தியர்களை உரிய பரிசோதனைக்கு பிறகு இந்தியாவுக்கு அழைத்து வர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

ஈரானில் இருந்து 58 பேர் ஏற்கனவே அழைத்து வரப்பட்டுள்ளனர். 529 பேரின் ரத்த மாதிரிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. பரிசோதனையில், கொரோனா வைரஸ் தாக்காதவர்கள் மட்டும் அழைத்து வரப்படுவார்கள்.

முதல்கட்டமாக, இத்தாலிக்கு 12-ந் தேதி (இன்று) ஒரு மருத்துவ குழு செல்கிறது. அக்குழு அங்குள்ள இந்தியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும்.

சுமார் 90 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. ஆனால், எல்லா நாடுகளில் இருந்தும் இந்தியர்களை அழைத்து வரத் தொடங்கினால், அது பீதியை அதிகரித்து விடும்.

ஈரானில் சிக்கித்தவிப்பவர்களில், லடாக், கா‌‌ஷ்மீர், மராட்டியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,100 யாத்ரீகர்களும் அடங்குவர். இதுதவிர, கா‌‌ஷ்மீரை சேர்ந்த 300 மாணவர்கள், கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரம் மீனவர்கள் ஆகியோரும் தங்கள் படிப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்காக நீண்ட நாட்களாக தங்கி இருக்கின்றனர். மீனவர்கள், அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கா‌‌ஷ்மீரில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும், பொது தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தியேட்டர்களை 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

விளையாட்டு கிளப்புகள், விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவையும் மூடப்பட்டன. அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கேரள மாநிலத்தில் மேலும் 8 பேருக்கும், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா மேலும் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News