செய்திகள்
மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் ரிசார்ட் அரசியல்... எம்எல்ஏக்களை வேறு மாநிலத்திற்கு மாற்றுகிறது காங்கிரஸ்

Published On 2020-03-11 04:20 GMT   |   Update On 2020-03-11 04:20 GMT
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
போபால்:

ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சியினர் வளைத்துவிடக் கூடாது என்பதில் அரசியல் கட்சிகள் கவனமாக இருப்பார்கள். எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பது தான் அவர்களின் முதல் வேலை. கட்சி தாவலை தடுக்கவும், குதிரை பேரத்தை தடுக்கவும் எம்.எல்.ஏ.க்களை சொகுசு ரிசார்ட்டுகளில் தங்க வைப்பார்கள். சாதகமான சூழல் வரும்போதுதான் அவர்கள் வெளியே அழைத்து வரப்படுவார்கள். 

இந்திய அரசியலில் பல மாநிலங்களில் இந்த ரிசார்ட் அரசியல் அரங்கேறியிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது மத்திய பிரதேசத்திலும் ரிசார்ட் அரசியல் தொடங்கி உள்ளது. 

ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளதால், கமல் நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் குருகிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 



இதேபோல் காங்கிரஸ் கட்சியும் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. ராஜினாமா செய்ததுபோக மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களையும், ஆதரவு அளிக்கும் பிற எம்.எல்.ஏ.க்களையும் மத்திய பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. 

92 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளர். இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அல்லது சத்தீஸ்கர் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News