செய்திகள்
நிர்மலா சீதாராமன்

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிர்மலா சீதாராமன் உறுதி

Published On 2020-03-06 10:55 GMT   |   Update On 2020-03-06 13:08 GMT
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன என உறுதியளித்துள்ளார்.
புதுடெல்லி:

கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கடன் சுமையில் இருந்து வங்கியை மீட்கும்பொருட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்.பி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப் படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 50 ஆயிரத்துக்குமேல் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் நடவடிக்கையால் யெஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டதால் வங்கியின் பங்குகள் கடுமையாக சரிந்தன.

இந்நிலையில், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

யெஸ் வங்கியின் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களின் பணம் பாதுகாப்பானது, நான் இந்திய ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசிவருகிறேன். எந்த ஒரு வாடிகையாளருக்கும்  எந்த இழப்பும் ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர்  எனக்கு உறுதியளித்துள்ளார்

இந்த விவகாரத்தை மத்திய வங்கி முழுமையாக எடுத்துக் கொண்டு விரைவான தீர்மானத்தை தருவதாக உறுதியளித்துள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வாடிக்கையாளர்கள், வங்கிகள் மற்றும் பொருளாதாரத்தின் நலனுக்காகவே என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News