செய்திகள்
கோப்புப்படம்

கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு இல்லங்கள்- கேரள மந்திரி

Published On 2020-03-06 08:35 GMT   |   Update On 2020-03-06 08:35 GMT
கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என சமூக நலத்துறை மந்திரி கே.கே. சைலஜா கூறியுள்ளார்.
கொச்சி:

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தலித் கிறிஸ்தவ இளைஞர் ஒருவர், வேறு சாதியைச் சேர்ந்த அவரது மனைவியின் குடும்பத்தால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கேரளத்தில் கலப்புத் திருமணம் புரிவோர் மற்றும் மதம் மாறி திருமணம் செய்வோர் பாதுகாப்பாக வசிப்பதற்காக காப்பகங்களை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோர் கொலை செய்யப்படுவது, மிரட்டப்படுவது உள்ளிட்ட அச்சுறுத்தல் காணப்படும் நிலையில், கேரள அரசு இத்தகைய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதுதொடர்பாக சமூக நலத்துறை மந்திரி கே.கே. சைலஜா கூறியிருப்பதாவது:-

‘கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்.


தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கலப்புத் திருமணம் செய்யும் தம்பதி பொதுப்பிரிவினராக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுய வேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக அவர்களுக்கு ரூ.30,000 ஏற்கெனவே சமூகநீதித்துறை வழங்கி வருகிறது.

தம்பதியில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. கலப்பு திருமணம் செய்வோர் அரசுப் பணியாளர்களாக இருக்கும் பட்சத்தில் பணியிட மாற்ற விவகாரத்தில் அவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் கலப்புத் திருமணம் செய்வோருக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் ஏதும் இப்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News