செய்திகள்
பாராளுமன்றம்

டெல்லி வன்முறை- நான்காவது நாளாக பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்

Published On 2020-03-05 07:15 GMT   |   Update On 2020-03-05 07:15 GMT
டெல்லி வன்முறை தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்தக்கோரி நான்காவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

டெல்லி வன்முறை தொடர்பாக தாமதம் செய்யாமல் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம்  நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். ஹோலி பண்டிகை முடிந்த பின்னர் இதுபற்றி விவாதிக்கப்படும் என அவைத்தலைவர் அறிவித்தார். இதனை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்றம் முடங்கியது.

இந்நிலையில் கூட்டத்தொடரின் 4வது நாளான இன்றும், இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. 

ஆனால் விவாதத்தை நடத்த விடாமல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் வலியுறுத்தினார்.



அதன்பின்னர்கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்தார். அவர் பேசி முடித்ததும், டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி, மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல் மக்களவையிலும் விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால்  12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது கொரோனா தொடர்பாக சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்தார். 

இந்தியாவில் மார்ச் 4-ம் தேதி நிலவரப்படி 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், 3 பேர் குணமடைந்திருப்பதாகவும் ஹர்ஷ் வர்தன் கூறினார். வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற வளாகத்திற்குள் தெர்மல் ஸ்கேனர் அமைப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் குப்தா, அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
Tags:    

Similar News