செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந் தேதி அமல் - நிர்மலா சீதாராமன் தகவல்

Published On 2020-03-05 00:12 GMT   |   Update On 2020-03-05 00:12 GMT
வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை அளித்துள்ளது என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 4 முக்கிய இணைப்புகளை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

இதன்படி வங்கிகள் இணைப்பு கீழ்க்கண்டவாறு அமைகிறது.

1. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

2. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது.

3. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது.

4. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.

இது ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கிகள் இணைப்புக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது. இந்த வங்கிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளது. இதில் ஒழுங்குமுறை பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

வங்கிகள் இணைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகளின் இயக்குனர்கள் குழு கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

2017-ம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 27 ஆகும். இப்போது இந்த வங்கிகளின் இணைப்புக்கு பின்னால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு தேனா வங்கியும், விஜயா வங்கியும் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன. அதற்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் அனைத்தும் அதனுடன் இணைக்கப்பட்டன.

நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் கைகளுக்கு போகிறது.

இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கையகப்படுத்திக்கொள்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.

முதலில் 49 சதவீத பங்குகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் கையகப்படுத்தத்தான் அனுமதி இருந்து வந்தது. இப்போது 100 சதவீத பங்குகளையும் விற்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Tags:    

Similar News