செய்திகள்
பாராளுமன்றம்

டெல்லி வன்முறை... எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

Published On 2020-03-02 08:16 GMT   |   Update On 2020-03-02 08:16 GMT
டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரம் நடந்த பகுதிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. மாநிலங்களவையில் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். டெல்லியில் தற்போது அமைதி திரும்புவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பின்னர் இதுபற்றி விவாதிப்போம் என்றும் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறி சமாதானப்படுத்தினார். ஆனால் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. 

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார்கள். அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News