செய்திகள்
சோனியா காந்தி வழங்கிய வெல்வெட் மலர்ப்போர்வை

அஜ்மீர் தர்காவுக்கு சோனியா காந்தி சமர்ப்பித்த வெல்வெட் மலர்போர்வை

Published On 2020-03-01 13:59 GMT   |   Update On 2020-03-01 13:59 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் 808-ம் ஆண்டு உருஸ் விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழங்கிய வெல்வெட் மலர்போர்வை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

புதுடெல்லி:

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் 808-வது ‘உருஸ்’ கொண்டாட்டங்கள் தற்போது அஜ்மீர் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த உருஸ் விழாவின்போது அவரது நினைவிடத்தின்மீது மலர்ப்போர்வைகளையும், சால்வைகளையும் அணிவித்து, மகிழும் மரபினை இங்குள்ள முஸ்லிம்களுடன், இதர மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

அவ்வகையில், காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் மலர்ப்போர்வையை காணிக்கையாக வழங்கினார்.



ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கேலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று அஜ்மீர் நகருக்கு சென்று அந்த மலர்ப்போர்வையை  தர்கா நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

மலர்ப்போர்வையுடன் உருஸ் விழாவை வாழ்த்தியும், இந்தியர்களிடையே மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தியும் சோனியா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியும் தர்கா வளாகத்தில் வாசிக்கப்பட்டது.
Tags:    

Similar News