செய்திகள்
சிவ போஜன் உணவகம்

‘சிவ போஜன்’ உணவக எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: மந்திரி சகன் புஜ்பால்

Published On 2020-02-29 02:11 GMT   |   Update On 2020-02-29 02:11 GMT
‘சிவ போஜன்’ உணவக எண்ணிக்கை மாநிலம் முழுவதும் அதிகரிக்கப்படும் என்று மந்திரி சகன் புஜ்பால் தெரிவித்து உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ள நிலையில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை ‘சிவ போஜன்' என்ற பெயரில் செயல்படுத்தி உள்ளது.

ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 2 சப்பாத்தி, 150 கிராம் அரிசி சாதம், ஒரு கப் பருப்பு குழம்பு, 100 கிராம் காய்கறி கூட்டு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மேல்-சபையில் சிவ போஜன் உணவகம் தொடர்பாக பாரதீய ஜனதா எம்.எல்.சி. நிரஞ்சன் தவ்காரே எழுப்பிய கேள்விக்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி சகன் புஜ்பால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், தற்போது மாவட்டம் மற்றும் நகராட்சி பகுதியில் தலா 1 ‘சிவ போஜன்’ உணவகம் திறக்கப்பட்டு உள்ள நிலையில், அதன் எண்ணிக்கையை மாநிலம் முழுவதும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ.10-க்கு வழங்கப்படும் மதிய உணவின் உண்மையான விலை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் முறையே ரூ.50 மற்றும் ரூ.35 ஆகும்.

இதனால் வருமானத்தில் உண்டாகும் பற்றாக்குறை தொகை மாநில அரசின் மானியத்தின் மூலம் ஈடுகட்டப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News