செய்திகள்
சோதனை நடத்திய தடயவியல் நிபுணர்கள்

டெல்லி வன்முறை- கவுன்சிலர் தாஹிர் உசேன் ஆலையில் தடயவியல் சோதனை

Published On 2020-02-28 09:16 GMT   |   Update On 2020-02-28 09:16 GMT
டெல்லி வன்முறையில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுன்சிலர் தாஹிர் உசேனின் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையின்போது, உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சாந்த் பாக் பகுதியில் உள்ள தாஹிர் உசேனின் வீடு மற்றும் அவரது ஆலையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று சோதனை நடத்தினர். அப்போது முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர். ஆலையை போலீசார் சீல் வைத்துள்ளனர். 

கவுன்சிலர் தாஹிர் உசேன் வீட்டு மாடியில் இருந்த கும்பல், தங்கள் மகன்  மீது கற்களை வீசி தாக்கி கொலை செய்ததாக அன்கிட் சர்மாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால்  தன் மீதான குற்றச்சாட்டை தாஹிர் உசேன் மறுத்துள்ளார். செவ்வாய்க்கிழமையன்று தன் வீட்டு மாடியில் நின்றவர்கள் அத்துமீறி நுழைந்தவர்கள் என்றும், பாதுகாப்பு கருதி போலீசாரின் உதவியுடன் திங்கட்கிழமையே குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறினார். 

செவ்வாய்க்கிழமை அவரது வீட்டு மாடியில் பெட்ரோல் குண்டுகள், கற்கள் மற்றும் செங்கற்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News