செய்திகள்
சிஏஏ போராட்டம் (கோப்பு படம்)

சிஏஏ-வில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மத்திய சட்டத்துறை மந்திரி

Published On 2020-02-27 23:54 GMT   |   Update On 2020-02-27 23:54 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெராடூன்:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. 

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிராளர்களுக்கும் இடையே கடந்த 24-ம் தேதி மோதல் வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் கலவரத்தில் முடிந்தது. 

இந்த கலவரத்தில் 38 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில், வடகிழக்கு டெல்லி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை தற்போது சீரடைந்துவருகிறது.

இந்நிலையில், உத்திரகாண்ட் மாநிலம் டெராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய சட்டத்துறை மந்திரியுமான ரவி சங்கர் பிரசாத் சிஏஏ-வில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். 



இது குறித்து அவர் பேசியதாவது:-

''எல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய இந்தியா வருபவர்களுக்கு குடியுரிமை ஏன் வழங்கக்கூடாது? திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

சிஏஏ-வில் இருந்து நாங்கள் பின்வாங்க முடியாது. ஆனால், சிஏஏ குறித்து மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். உண்மை என்னவென்றால், தூங்கிக்கொண்டிருப்பவர்களை நாம் எழுப்பிவிடலாம். ஆனால் தூக்குவதுபோல் நடித்துக்கொண்டிருப்பவர்களை ஒரு போதும் எழுப்ப முடியாது’’ என்றார்.
Tags:    

Similar News