செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

முஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா?

Published On 2020-02-27 06:51 GMT   |   Update On 2020-02-27 06:51 GMT
முஸ்லீம் வீடுகளுக்குள் போலீசார் ரசாயன வாயுவை செலுத்தும் கோர காட்சிகள் அடங்கிய வீடியோ டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



தலைநகர் டெல்லியில் கலவரம் வெடித்த பகுதிகளில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள முஸ்லீம் வீடுகளுக்குள் போலீஸ் அதிகாரிகள் ரசாயன வாயுவை பீய்ச்சி அடித்தது போன்ற தகவலுடன், கோர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ சமீபத்திய டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்பட்டதாக சமூக வலைதள பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. 39 விநாடிகள் ஓடும் வீடியோவிற்கு: "இதயத்தை பதற வைக்கும் சம்பவம். இந்த வீடியோ டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் எடுக்கப்பட்டதாகும். டெல்லி போலீசார் முஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயுவை பீய்ச்சி அடிக்கின்றனர். வீடுகளுக்குள் உள்ள குழுந்தைகள் அபாய நிலையில் உள்ளனர். குறைந்தபட்சம் குழந்தைகளை பற்றியாவது நினைத்து பார்க்க வேண்டும்." எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.



வீடியோவில் சிடிவி நியூஸ் இந்தியா சின்னம் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் யூடியூபில் சிடிவி நியூஸ் சேனலில் வீடியோ தலைப்பில் உள்ள தகவல்களை கொண்டு தேடிய போது, வைரல் வீடியோவின் உண்மை பதிப்பு காணக்கிடைத்தது. அந்த வீடியோ டிசம்பர் 18, 2019 இல் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த சம்பவம் டிசம்பர் 15, 2019 இல் நடைபெற்று இருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் இதே வீடியோவினை டிசம்பர் 17, 2019 முதல் பலர் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வகையில் இது கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது உறுதியாகி இருக்கிறது. வீடியோவில் உள்ள காட்சிகளின் உண்மை பின்னணி அறியப்படவில்லை. காவல்துறைதான் இந்த செயலை செய்ததா? என்றும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், வைரல் வீடியோ சமீபத்திய டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News