செய்திகள்
உயிரிழந்த அங்கித் சர்மா மற்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்

டெல்லி வன்முறை : உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்

Published On 2020-02-26 21:03 GMT   |   Update On 2020-02-26 21:03 GMT
டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் மத்திய அரசின் உளவுத்துறை பிரிவில் ரகசிய அதிகாரியாக செயல்பட்டுவந்த நபர் போராட்டக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:  

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

கடந்த 24-ம் தேதி மற்றும் அதற்கு மறுநாள் என இரண்டு தினங்கள் நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், வடகிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறையின் போது மத்திய அரசின் உளவுத்துறை பிரிவில் ரகசிய அதிகாரியாக செயல்பட்டுவந்த அங்கித் சர்மா (26) என்ற நபர் போராட்டக்காரர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சந்த்பாக் பகுதியை சேர்ந்த அங்கித் சர்மா அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக கள நிலவரங்களை சேகரிக்க வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாயும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அங்கித்தின் பெற்றோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சந்த்பாக் பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டுப்பகுதியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த அங்கித் சர்மாவின் உடலை நேற்று போலீசார் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து, சர்மாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரு தக் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News