செய்திகள்
உச்ச நீதிமன்றம்

டெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன்? காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-26 07:13 GMT   |   Update On 2020-02-26 07:13 GMT
டெல்லி காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாததுதான் பிரச்சினை என்றும் காவல்துறை சட்டத்தின் படி முழுமையாக செயல்பட்டிருந்தால் இந்த அளவிற்கு வன்முறை நடந்திருக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மக்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி வன்முறையில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும், வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிப்பதால், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.



அப்போது போலீசாரின் மெத்தன போக்கே வன்முறை இந்த அளவிற்கு பெரிதானதற்கு காரணம் என்று கூறிய நீதிபதிகள், நிலைமையை இந்த அளவிற்கு ஏன் கைமீற விட்டீர்கள் என கேள்வி எழுப்பினர். 

‘டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது. வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும்? காவல்துறையின் தொழில்முறை இல்லாமை, அவர்களுக்கு சுதந்திரம் இல்லாததுதான் பிரச்சினை. காவல்துறை சட்டத்தின் படி முழுமையாக செயல்பட்டிருந்தால், இந்த அளவிற்கு வன்முறை நடந்திருக்காது. 

இங்கு தாக்கல் செய்யப்பட்ட வன்முறை தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கும். ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News