செய்திகள்
மேகதாது அணை

மேகதாது அணை கட்டும் அனுமதிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு

Published On 2020-02-26 03:08 GMT   |   Update On 2020-02-26 04:58 GMT
டெல்லியில் நடந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் அனுமதிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
புதுடெல்லி:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் 5-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன் கலந்து கொண்டார். காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.




பின்னர் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடந்தது.

கூட்டங்களுக்கு பின்னர் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. முக்கியமாக மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு கேட்கும் ஒப்புதல் குறித்த பேச்சு எழுந்தது. தமிழகத்தை பொறுத்தவரை மேகதாது அணை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த அணையை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.

முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி, கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முன்மொழிவை தமிழகத்தின் சார்பாக மிகக்கடுமையாக ஆட்சேபித்தோம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பது பற்றியும் எடுத்துக் கூறினோம். இதுபற்றி விவாதிக்கவே கூடாது, அனுமதியும் கொடுக் கக்கூடாது என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதுபற்றி விவாதிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News