செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி போலீஸ் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Published On 2020-02-25 07:53 GMT   |   Update On 2020-02-25 09:35 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கலவரத்தை தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சம்பந்தப்பட்ட பகுதி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு டெல்லியை சேர்ந்த மக்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். வன்முறையை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது.

போராடுவதற்காக வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருவோரை எல்லையில் தடுத்து கைது செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.



டெல்லி மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. உரிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலிடத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்காததால் போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் டெல்லி கலவரம் தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News