செய்திகள்
தீபக் குப்தா

அரசை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் அல்ல - உச்சநீதிமன்ற நீதிபதி

Published On 2020-02-24 15:07 GMT   |   Update On 2020-02-24 15:07 GMT
அரசாங்கங்கள் எப்போதுமே சரியானவை அல்ல எனவும், அதை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்த முடியாது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஜனநாயகமும், எதிர்ப்பும் என்ற பெயரில் கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

அரசின் கருத்துகளுக்கு மாறுபட்ட அபிப்ராயம் தெரிவிப்பவர்களை சமீபகாலமாக தேச விரோதிகள் என அழைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தேர்தலில் 51 சதவீதம் வாக்குகள் பெற்று ஒரு கட்சி வெற்றி பெற்றுவிட்டால், 49 சதவீதம் பெற்ற மற்ற கட்சிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அக்கட்சியை பற்றி பேசக்கூடாது என்பது அர்த்தம் அல்ல. ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது, பங்கெடுக்கலாம். 

எப்போதெல்லாம் சித்தாந்தங்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறதோ அப்போது எதிர்ப்பு உருவாகும். யாரோ ஒரு முரண்பாடான கருத்தை எடுத்துக் கொண்டால் அவர் நாட்டை அவமதிக்கிறார் என்று அர்த்தமல்ல. கேள்வி கேட்கும் உரிமை ஜனநாயகத்தின் உள்ளார்ந்த பகுதியாகும்.

அமைதியான முறையில் எத்தனை காலம் வேண்டுமானாலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்த உரிமை உண்டு. அரசாங்கங்கள் எப்போதும் சரியானவை அல்ல. அரசை எதிர்ப்பது என்பது தேசவிரோதம் என்று அப்பட்டமாக முத்திரை குத்துவது ஜனநாயக இயக்கத்தை வேண்டுமென்றே நிறுத்துகிறது.



தேசவிரோத வழக்கு ஒருவர் மீது சுமத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக வாதிடமாட்டோம் என வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் போட்டதை நான் கண்டிக்கிறேன். இது சட்ட நெறிமுறைகளுக்கு விரோதமானது

சில நேரங்களில் சில தீர்ப்புகள் மீது எனக்கு உடன்பாடில்லை. அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், நான் தீர்ப்பு வழங்கும் அமர்வில் இருந்துவிட்டால், நீதியின் அடிப்படையில்தான் செயல்படுவேன்.

நீதித்துறை எப்போதும் அச்சமற்று, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். எதிர்க்கவும், மாற்றுக்கருத்து கூறவும் உரிமை இருக்கிறது, விமர்சிக்கக்கூட உரிமை இருக்கிறது. நீதித்துறை கூட விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல.

இவ்வாறு தீபக் குப்தா கூறினார். 
Tags:    

Similar News