செய்திகள்
மோதல் நடைபெற்ற பகுதி

டெல்லி போராட்டத்தில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு- துப்பாக்கி சூடு

Published On 2020-02-24 10:32 GMT   |   Update On 2020-02-24 10:32 GMT
டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், ஆதரவு போராட்டக்காரர்களுக்குமிடையே இன்றும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், டெல்லி ஜாப்ராபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. 



மாஜ்பூர் மற்றும் ஜாப்ராபாத் பகுதியில் இன்று நடந்த மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். 2 வீடுகள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஜாப்ராபாத்தில் போலீஸ்காரர்களை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். துப்பாக்கி சூடு நடத்தியதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் பஜன்பூரா பகுதியிலும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தால் வடகிழக்கு டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. ஜாப்ராபாத், மாஜ்பூர் பார்பர்பூர் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. அந்த ரெயில் நிலையங்களில் எந்த ரெயிலும் நிறுத்தப்படவில்லை. 

டெல்லியில் இன்று மீண்டும் வன்முறை வெடித்ததால் இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இருவரும் அகமதாபாத்தில் இருந்து உடனடியாக டெல்லி திரும்புகிறார்கள்.
Tags:    

Similar News