செய்திகள்
கோப்பு படம்

மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் - கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி நெகிழ்ச்சி

Published On 2020-02-24 05:44 GMT   |   Update On 2020-02-24 08:02 GMT
இந்தியாவில் முதன் முதலாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி மருத்துவத்துறைக்கு தலை வணங்குவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்தியாவின் கேரளாவில் இருந்து சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற மாணவ- மாணவிகள் அங்கு கொரோனா வைரஸ் பரவியதும், அவசரமாக நாடு திரும்பினர்.

இவர்களில் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நோயாளி என்று அந்த மாணவி கருதப்பட்டார். அவருக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்சூர் மாணவியை தொடர்ந்து ஆலப்புழா, காசர்கோடு மாவட்டங்களிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆலப்புழா, காசர்கோடு மாணவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் மாணவியும் கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்தார்.

ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்று நலமடைந்த திருச்சூர் மாணவி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

சீனாவில் இருந்து திரும்பியதும், என்னை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் ஊர் திரும்பியதும் அந்த சம்பவம் நடந்தது. வீட்டில் சில நாட்கள் தங்கிய பின்பு லேசான காய்ச்சல் வந்தது. அடுத்த நாட்களில் அது அதிகமானது.

உடனே நான், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு வைரஸ் தாக்குதல் உறுதியானதும், நான் மனதளவில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். எனக்கு மருத்துவத்துறையின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. எனக்காக இரவு பகல் பாராமல் பலர் உழைத்தனர்.

அவர்களின் அர்ப்பணிப்பும், கவனிப்புமே என்னை வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தது. அதன் பிறகே என் மன அழுத்தமும் குறைந்தது. இதற்காக கேரள மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன்.

எனது மனவலிமையை அதிகரிக்க டாக்டர்கள் என்னிடம், என் அம்மாவை பேச வைத்துக் கொண்டே இருந்தனர். நான் தனியாக இல்லை. ஒரு மாநிலமே எனக்கு பின்னால் இருப்பதாக சுகாதாரப் பணியாளர்கள் கூறிக்கொண்டே இருந்தனர்.

கேரள அரசு எனக்காக மேற்கொண்ட பணிக்கு நான், உண்மையில் தலை வணங்குகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Tags:    

Similar News