செய்திகள்
பாஜக கட்சி கொடி மற்றும் சரத் பவார் (கோப்பு படம்)

என்னை பற்றி பி.எச்.டி பட்டம் படிக்க பாஜக தலைவருக்கு 12 ஆண்டுகள் தேவைப்படும் - சரத் பவார் கிண்டல்

Published On 2020-02-23 21:45 GMT   |   Update On 2020-02-23 21:45 GMT
தன்னை பற்றி பி.எச்.டி பட்டம் படிக்க மகாராஷ்டிரா பாஜக தலைவருக்கு 12 ஆண்டுகள் தேவைப்படும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் மூலம் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக பதவி வகித்துவருகிறார்.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளை கைப்பற்றியது. 

பாஜக-சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து பாஜகவில் இருந்து பிரிந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணி அமைவதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் ஆவார்.

இதற்கிடையில், கடந்த 14-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ''தனது கட்சியில் மிகக்குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட போதிலும்  சரத்பவார் தேசிய அரசியலில் மிகவும் முக்கியமான இடத்தில் தன்னை தொடர்ந்து நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார். மேலும், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே மற்றும் சோனியா காந்தி ஆகிய மூவரையும் அவர் ஒரே நேரத்தில் சமாளிக்கிறார். 



சரத் பவாரின் இந்த திறமைகளை பற்றி அறிய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் ஒரு பட்டதாரி என்றபோதிலும் பிஎச்.டி. பட்டம் படிக்க எனக்கு அனுமதி கிடைத்தால் சரத் பவார் குறித்து பி.எச்.டி. பட்டம் படிக்க மிகவும் ஆசைபடுகிறேன்’’ என கூறியிருந்தார்.  

இந்நிலையில், மும்பையில் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இது குறித்து பவார் பேசுகையில், ''பொதுவாக முதுகலை பட்டம் படித்த பின் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் படித்து முடிக்க 3 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் சந்திரகாந்த் பாட்டீல் (பாஜக தலைவர்) என்னை பற்றி பி.எச்.டி. பட்டம் படித்து முடிக்க 10 முதல் 12 ஆண்டுகள் வரை தேவைப்படலாம்’’ என்றார்.
Tags:    

Similar News