செய்திகள்
வைரஸ் தடுப்பு மருந்துகளை ஆய்வு செய்யும் சீன பெண் டாக்டர்

சீனாவுக்கு மருந்துப்பொருட்கள் ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு

Published On 2020-02-23 20:12 GMT   |   Update On 2020-02-23 20:12 GMT
கொரோனா அச்சுறுத்தல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுக்கு ஒருசில மருந்துபொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 2442 ஆக உயர்ந்துள்ளது என அம்மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. சீனா முழுவதும் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நோயாளிகளுக்கு தேவையான முகமூடிகள், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்துபொருட்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தன. 

இதற்கிடையில், சீனாவுக்கு நட்பு ரீதியாக மத்திய அரசு மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்தது. இதற்காக ராணுவ விமானம் ஒன்று அந்நாட்டின் வுகான் நகருக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தது. 

அந்த ராணுவ விமானத்திலேயே வுகான் நகரில் சிக்கியுள்ள 100-க்கும் அதிகமான இந்தியர்களை தாய்நாடு அழைத்துவரவும் திட்டப்பட்டிருந்தது. ஆனால், வுகான் நகருக்கு இந்திய விமானம் செல்ல அனுமதி தர சீன அரசு கால தாமதம் செய்துவருகிறது. இதனால் வுகானில் உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவிவருகிறது.



இந்நிலையில், சீனாவுக்கு சில மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில்,''  உலகின் மற்ற நாடுகளை போலவே கோடிக்கணக்கான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. இந்த விவகாரத்தை சரிவர கையாளவில்லை என்றால் வைரஸ் தாக்குதல் மிகப்பெரிய உலகலாவிய ஆபத்தாகிவிடும். 

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின் படி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுக்காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும், உள்நாட்டில் தட்டுப்பாடுகள் உள்ள ஒருசில மருந்துப்பொருட்கள், உபகரணங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். 

Tags:    

Similar News