செய்திகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை குஜராத் வருகை

Published On 2020-02-23 05:32 GMT   |   Update On 2020-02-23 11:18 GMT
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
புதுடெல்லி:

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அவரது பதவி காலம் விரைவில் முடிவடைகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் இறுதியில் நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே டிரம்ப்பை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகளை கவர்வதற்காக டிரம்ப் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

அவருடன் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷ்னெர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள்.

“ஏர் போர்ஸ் ஒன்” விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்துக்கு பகல் 12.30 மணிக்கு வரும் அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்.

டிரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. டிரம்பும், மோடியும் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாக செல்கின்றனர். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

பேரணி முடிந்தவுடன் இருவரும் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ‘மோதேரா மைதானத்தை’ பார்வையிடுகின்றனர்.

அங்கு நடைபெறும் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்கிறார்கள். கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறார். அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். காந்தி நினைவாக நூல் ராட்டையும், புத்தகமும் டிரம்புக்கு மோடி பரிசாக வழங்குகிறார். சபர்மதி ஆசிரமத்துக்கு செல்வது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

டிரம்பிற்கு குஜராத் வகை உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு அவர் அகமதாபாத்தில் இருந்து தாஜ்மகாலை பார்ப்பதற்காக விமானத்தில் ஆக்ரா செல்கிறார். அவருடன் மோடி செல்லும் திட்டம் இல்லை.

விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் செல்லும் 13 கி.மீ. தூரத்துக்கு அவரை வரவேற்று விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ரம்மியமான யமுனை நதிக்கரையில் காதல் சின்னமான தாஜ்மகாலில் அவர் மனைவியுடன் நேரம் செலவழிக்கிறார். இதற்காக யமுனை ஆற்றில் இருந்து மாசு கலந்த நீர் வெளியேற்றப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டு உள்ளது.

பின்னர் ஆக்ராவில் இருந்து டெல்லி வருகிறார். அங்குள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் டிரம்ப் ஓய்வு எடுக்கிறார்.

25-ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்தை டிரம்ப் சந்திக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதைத்தொடர்ந்து ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தி அரச மரம் நடுகிறார்.

ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்துகிறார். அப்போது இரு நாடுகள் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் டிரம்ப் கலந்து கொள்கிறார்.

இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

டிரம்ப் 36 மணி நேரம் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

குண்டு துளைக்காத காரில் டிரம்ப் பயணம் மேற்கொள்வார். அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல், போகும் பாதை ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர். சி.) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மோடியுடன் டிரம்ப் பேசுவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின் போது மத சுதந்திரம் குறித்து மோடியுடன் விவாதிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காஷ்மீர் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்படும்.

டிரம்ப் வருகையையொட்டி அகமதாபாத்தில் மேற்பார்வை குழு நேற்று ஆலோசனை நடத்தியது. அகமதாபாத் மேயர் பிஜல் பட்டேல் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தது.

மோசமான வானிலை நிலவும்பட்சத்தில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் டிரம்ப் விமானம் தரை இறங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர்களாக இருந்த பில் கிளிண்டன், ஒபாமா ஆகியோர் இந்தியா வந்திருந்தனர். ஒபாமா 2 முறை (2010, 2015) வந்தார். அந்த வரிசையில் தற்போது டிரம்பும் இணைகிறார்.

Tags:    

Similar News