செய்திகள்
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அறிவிப்பால் ஆளும் கூட்டணியில் உரசல்?

Published On 2020-02-22 09:59 GMT   |   Update On 2020-02-22 09:59 GMT
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவோம் என உத்தவ் தாக்கரே அறிவித்ததால் ஆளும் கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை:

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மாநிலத்தில்  குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய மக்கள்தொகை பதிவேடும்  அமல்படுத்துவோம் என அறிவித்தார். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேடு யாரையும் நாடற்றவர்களாக ஆக்கிவிடாது என்றும் அவர் கூறினார். 



மகாராஷ்டிர  ஆளும் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் சிஏஏ, என்பிஆரை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உத்தவ் தாக்கரே அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் ஆளுங்கூட்டணியில் உரசல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் கூட்டணிக் கட்சிகளிடையே உரசல் ஏதும் இல்லை என்றும், அரசை 5 ஆண்டுகளுக்கு நடத்துவோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உத்தவ் தாக்கரேவை காங்கிரஸ் சம்மதிக்க வைக்கும் என எம்எல்ஏ ஜீசான் சித்திக் தெரிவித்துள்ளார்.

‘அவரை (உத்தவ்) சம்மதிக்க வைப்பது எங்கள் பொறுப்பு, நாங்கள் அதை செய்வோம் என்று நம்புகிறோம். சிஏஏவுக்கு ஆதரவாக உத்தவ் பேசியதை வைத்து, கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூற முடியாது. பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், அற்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். வரும் கூட்டத்தொடரில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என சித்திக் கூறினார். 
Tags:    

Similar News