செய்திகள்
திருப்பதி கோவில் லட்டு

திருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு

Published On 2020-02-22 07:16 GMT   |   Update On 2020-02-22 07:16 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகுண்டம் கியூகாம்ப்ளக்சில் இலவச லட்டுக்கான டோக்கனை வாங்கும் பக்தர்கள் பலர் கோவிலுக்குள் செல்லாமலும், சாமி தரிசனம் செய்யாமலும், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து வெளியேறி, லட்டு கவுண்ட்டர்களில் டோக்கனை வழங்கி இலவச லட்டு பிரசாதத்தை வாங்கி செல்கிறார்கள். ஒருசிலர் லட்டு பிரசாதத்தை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசிச்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இலவச லட்டு பிரசாதத்துக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனை வழங்கும் போது, அங்கேயே ஒரு முறை ஸ்கேன் செய்து பக்தர்களை அனுப்ப வேண்டும்.

இதையடுத்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானைகேட் என்ற இடத்தில் பக்தர்கள் வரும்போது, அதே லட்டு டோக்கனை 2-வது முறையாக ஸ்கேன் செய்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்ப வேண்டும். அப்படி செய்தால் தான் சாமி தரிசனம் செய்யாமல் வைகுண்டம் கியூகாம்ப்ளக்சில் இருந்து எந்தவொரு பக்தரும் வெளியேறி, இலவச லட்டு பிரசாதத்தை வாங்க முடியாது.

இலவச லட்டு டோக்கனை வாங்கும் இடத்தில் ஒருமுறை ஸ்கேன் செய்த பக்தர்கள், அதே டோக்கனை மறுமுறையும் ஸ்கேன் செய்தே ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News