செய்திகள்
டிரம்ப்

டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் எச்சரிக்கை

Published On 2020-02-22 02:12 GMT   |   Update On 2020-02-22 02:12 GMT
இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. ஆனால் அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் நீட்சியாக டிரம்பின் வருகை இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ஆனந்த் சர்மா எச்சரித்துள்ளார்.
புதுடெல்லி :

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் இடையே ஆமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் சிறப்பு பொதுக்கூட்டம் (நமஸ்தே இந்தியா) ஒன்றிலும் அவர் உரையாற்றுகிறார். டிரம்பின் இந்த வருகையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக மட்டும் நடத்தக்கூடாது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ஆனந்த் சர்மா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவை காங்கிரஸ் புரிந்து கொள்வதுடன், அதை ஆதரிக்கவும் செய்கிறது. நட்புறவு மற்றும் ராணுவம், பொருளாதாரம், அணுசக்தி, விண்வெளி, விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு விவகாரங்களில் டிரம்பின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இந்த பயணத்தின்போது இறையாண்மை, சுயமரியாதை, தேசிய நலன் ஆகிய மூன்றையும் மனதில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.



ஆமதாபாத்தில் நடைபெறும் ‘நமஸ்தே இந்தியா’ நிகழ்ச்சி குறித்து ஆனந்த் சர்மா கூறுகையில், ‘மற்றொரு நாட்டு தேர்தலில் நாம் ஒருபோதும் பங்கேற்பதில்லை. ஆனால் அமெரிக்காவில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் இந்த தவறு நடந்துள்ளது. எனவே பிரதமர் மோடி கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் நீட்சியாக டிரம்பின் வருகை இருக்கக்கூடாது’ என்று எச்சரித்தார்.

Tags:    

Similar News