செய்திகள்
மரோரா கிராம மக்கள்

டிரம்ப் பெயர் வைத்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு- பொதுமக்கள் வேதனை

Published On 2020-02-21 09:11 GMT   |   Update On 2020-02-21 09:11 GMT
இந்தியாவுக்கு வரும் டிரம்ப் கிராமத்திற்கு தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என மரோரா கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரோரா:

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பும், பிரதமர் மோடியும் முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு சந்தித்தபோது அரியானாவில் இருந்து 12ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு டிரம்ப் பெயர் சூட்டப்பட்டது.

தற்போது இந்தியாவுக்கு வரும் டிரம்பை தங்கள் கிராமத்துக்கு வருகை தந்து தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாஷிங்டனின் சமூக சேவை நிறுவனமான சுலப் இண்டர்நே‌ஷனல் சார்பில் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட போது அதை மரோரா கிராமம் பெற்றது.

2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் டிரம்பும் முதல்முறையாக சந்தித்த போது இந்த சிறப்பை மரோரா பெற்றதால் அதன் நினைவாக டிரம்ப் கிராமம் என பெயரிடப்பட்டது. அன்று முதல் இந்த கிராமத்தில் உள்ள விதவைகளுக்கும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பல வண்ணங்களில் கழிவறைகள் கட்டப்பட்டன. நாளடைவில் அந்த கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கட்டப்பட்ட கழிவறைகள் பயன்பாடற்று காணப்படுகின்றன.

தண்ணீர் இல்லாமல் இந்த கழிப்பறைகள் பயன்பாடற்று கிடப்பதால் தற்போது இந்தியாவுக்கு வரும் டிரம்ப் இந்த கிராமத்திற்கு தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என மரோரா கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினசரி தேவைகளுக்காக லாரிகளை நம்பியே இந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் டிரம்ப் கிராமம் என பெயர் பெற்ற பிறகு அங்குள்ள மாவட்ட நிர்வாகம் அந்த கிராமத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் சட்டவிரோதமானவை என அறிவித்தது.

இதையடுத்து சுலப் இண்டர்நே‌ஷனல் அவசர அவசரமாக அந்த கிராமத்தில் வைக்கப்பட்ட பேனர்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை நீக்கியது. எனினும் டிரம்ப் கிராமம் என்ற பெயர் மட்டும் அப்படியே உள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தையும் மத்திய அரசு சில வாரங்களில் மூடிவிட்டது. பயிற்சியாளர் வரவே இல்லை. இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணர்கிறோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

டிரம்பும் அவரது அதிகாரிகளும் எங்களுக்கு எப்போது தண்ணீர் விநியோகம் செய்ய போகிறார்கள் என கிராம மக்கள் கேட்கின்றனர். மரோரா பஞ்சாயத்தில் மரோரா, நிஸாம்பூர், ஜாவா ஆகிய பகுதிகளில் டேங்கர் லாரி தண்ணீரை ரூ.1000-க்கு வாங்குகிறோம்.

ஆனால் கோடை காலத்தில் இதன் விலை ரூ.1500 ஆக உயரும். தண்ணீருக்காகவே அதிக பணத்தை செலவழிக்கிறோம். சுலப் நிறுவனத்தினர் வந்தார்கள் கழிவறைகளை கட்டினார்கள், கிராமத்தின் பெயரை மாற்றினார்கள், போட்டோ எடுத்துக் கொண்டார்கள். போய்விட்டார்கள்’ என்று கிராமத்தினர் ஆதங்கப்பட்டனர்.
Tags:    

Similar News