செய்திகள்
சூரத் மருத்துவமனை

குஜராத்தில் பெண் ஊழியர்களை நிர்வாணமாக நிற்க வைத்து மருத்துவ பரிசோதனை

Published On 2020-02-21 07:27 GMT   |   Update On 2020-02-21 07:27 GMT
குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்களை மருத்துவ பரிசோதனைக்கு நிர்வாணமாக நிற்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சூரத்:

குஜராத் மாநிலம் பூங் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாணவிகள் 68 பேருக்கு மாதவிடாய் இருக்கிறதா? என அவர்களின் ஆடைகளை அவிழ்த்து நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்திற்குள்ளானது.

இந்நிலையில் சூரத் மாநகராட்சியில் பயிற்சி அலுவலர்களாக பணியாற்றும் 100 ஊழியர்கள் கட்டாய மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு நடத்தும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் பெண் ஊழியர்களை அங்குள்ள ஒரு அறையில் நிர்வாணமாக வெகு நேரம் நிற்க வைத்துள்ளனர். 10 பேர் கொண்ட குழுக்களாக பிரித்துள்ளனர். அந்த அறையிலும் கதவு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.

வெளியில் இருந்து யாரும் பார்க்காமல் தடுப்பதற்காக ஒரே ஒரு திரை மட்டும் அங்கு போடப்பட்டிருந்ததாக ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

திருமணமாத பெண் ஊழியர்களிடம் நீங்கள் எப்போதாவது கர்ப்பமாக இருந்தீர்களா? என அங்கிருந்த பெண் டாக்டர்கள் தேவையற்ற கேள்விகளை கேட்டு முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பெண் ஊழியர்கள் மாநகராட்சி கமி‌ஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

ஆண் ஊழியர்களுக்கு கண், காது, தொண்டை, இதயம் மற்றும் நுரையீரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்கள் புகாரை தொடர்ந்து இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பெண் ஊழியர்கள் கூறுகையில், ‘இத்தகைய அவமானகரமாக, மனிதாபிமானமற்ற சோதனைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். இதுபோன்ற சோதனை வேறு எங்கும் நடத்தப்பட்டதாக நாங்கள் கேள்விபட்டதில்லை’ என்றனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை மகளிர் மருத்துவதுறை தலைவர் அஸ்வின் வச்சனி, எங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலின் படியே பெண்களுக்கு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆண்களுக்கு இதுபோன்ற சோதனைகள் செய்யப்படுகிறதா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பெண்கள் வி‌ஷயத்தில் நாங்கள் வழிமுறையை பின்பற்றுகிறோம் என்றார்.
Tags:    

Similar News