செய்திகள்
அமித் ஷா

அருணாசல பிரதேச சுற்றுப்பயணம்- அமித் ஷாவுக்கு சீனா எதிர்ப்பு

Published On 2020-02-21 07:15 GMT   |   Update On 2020-02-21 07:15 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அருணாசல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

அருணாசல பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்ட 34-வது ஆண்டு தினத்தையொட்டி அந்த மாநில தலைநகர் இட்டா நகரில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து வரும் அரசியலமைப்பு சட்டத்தில் 371-வது சட்டப்பிரிவை ரத்து செய்யமாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே அமித் ஷா அருணாசல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் என்று சீனா கூறி வருகிறது. அது தங்கள் நாட்டு பகுதி என்றும் உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அமித் ஷாவின் வருகைக்கு அந்த நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங்யுவாங் கூறியதாவது:-

அருணாசல பிரதேசம் என்று அழைக்கப்படும் இடத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக சீன அரசு ஏற்று கொள்ளவில்லை. சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தெற்கு திபெத்துக்கு இந்திய உள்துறை மந்திரி பயணம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இது சீனாவின் பிராந்திய இறையாண்மைக்கு எதிரான செயலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய தலைவர்கள் அருணாசல பிரதேசத்துக்கு செல்லும்போதெல்லாம் சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் அமித் ஷாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

சீனா வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த கருத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது:-

அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு பயணம் செய்வது போல் இந்திய தலைவர்கள் அருணாசல பிரதேசத்துக்கு சென்று வருகிறார்கள்.

அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாகும். இது மிக தெளிவாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News