செய்திகள்
கோப்புப்படம்

தங்கையை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

Published On 2020-02-21 05:31 GMT   |   Update On 2020-02-21 05:31 GMT
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடனம் ஆடிய தங்கையை மணமகன் அடித்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பரேலி:

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. மணமகன் ஒரு ராணுவ வீரர்.

திருமணத்துக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் தடல் புடலாக நடந்து முடிந்தது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகினார்கள்.

மணமகனின் தங்கை உற்சாகமாக நடனமாடினார். இதை கண்ட மணமகனுக்கு சகோதரி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அருகில் இருந்த நாற்காலியை எடுத்து சகோதரியை அடித்தார்.

இதை பார்த்த மணமகள் மணமேடையிலேயே மாலையை உதறி விட்டு எழுந்தார். இவரை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தார். ‘இப்படி ஒரு முன் கோபக்காரருடன் என்னால் வாழ முடியாது. இப்போது அவர் சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை திருமணத்துக்கு பின் என்னையும் இப்படித்தான் அடிப்பார்.

பெண்களை மதிக்க தெரியாத இதுபோன்ற நபர்களுடன் என்னால் வாழ முடியாது’ என்று திருமணத்தை நிறுத்திவிட்டார்.

மணமகன் குடிபோதையில் இருந்ததாகவும் அதனால் தான் இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிய வந்தது. உறவினர்கள் சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் அதை ஏற்கவில்லை. வீட்டுக்கு திரும்பி விட்டார். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News